Wednesday, April 10, 2019

Hotel Kadampas - Kamarajar Salai, Madurai
மதுரையில், நல்ல உட்புற சூழலுடன் உள்ள உணவகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியான ஒரு நல்ல உணவகம் தான் "Kadampas". காமராஜர் சாலை, கணேஷ் தியேட்டர் எதிரே இருக்கிறது இந்த உணவகம். ஹோட்டலின் பின்புறம் கார்கள் நிறுத்த இட வசதி உள்ளது (இல்லையென்றால் இங்கு கார்களில் வருபவர்கள் பாடு மிகவும் கஷ்டம்).
உள்ளே இருக்கும் பெரிய இடத்தை இரண்டு பிரிவுகளாக மாற்றி உள்ளனர். மிக விசாலமான குளிரூட்டப்பட்ட அறை ஒன்றும் AC இல்லாத சற்றே சிறிய அறையும் இருக்கின்றன. நல்ல சொகுசான இருக்கைகள் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்றுகிறது


காலை, மதியம் , இரவு ...மூன்று வேளையும் உணவு கிடைக்கிறது. நான் இரு முறை சென்றதும் இரவு உணவுக்கு தான். தென்னிந்திய உணவு வகைகள் தவிற வட இந்திய உணவு வகைகளும்(ரோட்டி, நான் , குல்ச்சா...) கிடைக்கின்றன. குறிப்பாக காஷ்மீரி நான் நாவை விட, கண்ணுக்கு அருமையான விருந்தாக இருந்தது. பொதுவாக நான் சற்று தடிமனாக ஹோட்டல்களில் செய்வார்கள். அனால் இங்கு அதை மிக மெலிதாக (thin crust pizza வை விட ) செய்து அதன் மேல் ஆப்பிள் , மாதுளை , கொடிமுந்திரி ஆகிய பழங்களை வைத்துத் தருகிறார்கள். தொடுகறி எதுவும் இல்லாமலேயே சாப்பிட முடிகிறது.
தோசை வகைகளில் பொடி தோசையும், நெய் தோசையும் நல்ல சுவை. நான் சாப்பிட்ட பல உணவகங்களில் schezwan fried rice என்றாலே அளவுக்கு அதிகமாக கார பொடியை தூவி, அதோடல்லாது சில, பல சிவப்பு மிளகாய்களும் நிரம்பி இருக்கும். சாப்பிட்டு முடிப்பது பெரிய சவாலான விஷயமாக இருக்கும்.அனால் இங்கு அதையே மிதமான காரத்துடன் , ருசியும் குறையாமல் செய்து இருந்தது மனதிற்கும், முக்கியமாக வயிற்றுக்கும் இதமாக இருந்தது.மிகுந்த ஆடம்பரம் இல்லாத அனால் தரமான சூழலில் நல்ல உணவருந்த ஏற்ற இடமாக இருந்தது இந்த Kadampas.


Venkadapathy Iyengar Hotel, Anna Nagar, Madurai

எத்தனை முறை எவ்வளவு பெரிய உணவகங்களில் உண்டாலும் ....அந்த சிலாகிப்பு உடனே மறைந்துவிடுகிறது எனக்கு. அதே நேரம் சிறிய உணவகங்கள் / மெஸ் களில் இருக்கும் அணுக்கம் என்னை மீண்டும் மீண்டும் அங்கு செல்லத் தூண்டுகிறது .(அது போன்ற இடங்களில் உணவின் ருசி கூட அவ்வளவு முக்கியமாகப்படுவதில்லை). பல வகையான உணவு வேண்டும், ஆனால் அது இப்படி அணுக்கமான இடங்களில் இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதே போன்ற உணர்வையே நண்பர்கள் வரதன், லிபி, போன்றோரிடமும் பார்க்கிறேன். இந்த விருப்ப ஒற்றுமையே எங்களை ஒன்றாக உண்ண அழைத்து செல்கிறது என்று தோன்றுகிறது.

இந்த மாதிரியான ஒரு உணவகம், மதுரை, அண்ணா நகர், சர்வேஸ்வரன் கோயில் அருகே உள்ள  "வெங்கடபதி ஐயங்கார் ஹோட்டல் ". மிகச் சிறிய இடம் தான். ஹோட்டல் தொடங்கிப் பல மாதங்கள் ஆனாலும் இன்னமும் மெனுவில் இருக்கும் எல்லா உணவுகளும் கிடைப்பதில்லை. நீங்கள் கேட்கும் உணவு கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம் தான். அனால் அவர்களிடம் எனக்குப் பிடித்த விஷயம்...செய்யும் உணவை, வீட்டு சுவையில் தருவது தான்.
காலை வேளையில் இட்லி, இடியாப்பம் , தோசை வகைகள்(கம்பு தோசை எனக்குப் பிடித்த மற்றறொரு உணவு ) மற்றும் பொங்கல் கிடைக்கிறது. இடியாப்பத்துடன் சொதி தருகிறார்கள்.திருநெல்வேலிப் பக்கம் பிரபலமான சொதியை நான் சாப்பிட்டதில்லை . அதனால் இங்கு கிடைக்கும் சொதி அதே போன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. அனால் இடியாப்பத்திற்கு நல்ல தொடுக்கறியாக இருக்கிறது .

மதியம் சாப்பாடு தவிர புளியோதரை , தயிர் சாதம் , சாம்பார் சாதம் போன்றவை இருக்கிறது. இரவு பல விதமான உணவு வகைகள் கிடைக்கின்றன. வழக்கமான பரோட்டா வகைகள், சப்பாத்தி, போன்றவற்றுக்கு நடுவே, பொடி இட்லி நன்றாக இருந்தது. வீட்டில் அரைக்கும் இட்லி பொடி போன்ற சுவை.(மற்ற உணவகங்களில் அநேகமாக கடைகளில் விற்கப்படும் ஆயத்த இட்லி பொடிகளை தான் வைக்கிறார்கள்) சிறிய இட்லி துண்டுகளை எண்ணையில் கலந்த பொடியில் பிராட்டித் தருகிறார்கள். சட்னி, சாம்பார் இல்லாமலேயே சாப்பிட நன்றாக இருக்கிறது

உணவு தரமாக இருப்பினும் விலை மலிவு தான் என்பதால் அனைத்து தரப்பு மக்களுக்குமான உணவகமாகவே இருக்கிறது. பட்டியலிடப்பட்ட உணவுகள் அனைத்தும் கொடுக்க முடிந்து விட்டால் , வயிறைக் கெடுக்காத, பர்ஸை பதம் பார்க்காத, அருமையானதொரு வீட்டு சாப்பாடு கிடைக்கும் உணவகமாக இது மாறி விடும்.


The Idly Shop ( அந்த இட்லி கடை), Cinipriya theater complex, Anna Nagar, Madurai
பொதுவாக நான் வீட்டிலேயே இட்லியை விட அதிகம் விரும்புவது தோசையைத்தான். அதுவும் ஹோட்டலில் சென்று இட்லி தின்பது மிகக் குறைவு. அதுவரை கிடைத்த இட்லிகளினால் உண்டான எண்ணம் அது. அலுவலகத்தில் நண்பர் நிர்மல் இந்தக் கடையைப் பற்றி எனக்குச் சொன்னபோது மற்றுமொரு ஹோட்டலாகத் தான் இருக்கும் என்று நினைத்தேன். இருந்தாலும் அசைவப்பிரியரான அவர் இந்த சைவ உணவகம் பற்றிச் சொன்னதால் சென்று விடுவதென்று முடிவு செய்தேன்.

பிளாஸ்டிக் பொருளகள் மீதான தடைகள் வரும் முன்னரே இவர்கள் இலையில் தான் உணவு வழங்குகிறார்கள். சூடான உணவை இலையில் உண்பதில் எனக்கு எப்போதுமே விருப்பமுண்டு. அதற்க்கு ஒரு தனிச்சுவை. பெயரிலேயே இட்லி இருக்கிறதே என்று முதலில் இட்லி கொண்டு வரச் சொன்னேன். அதைத் தொட்ட முதல் ஸ்பரிசத்திலேயே அதன் மீது காதலாகிப் போனேன்.அவ்வளவு மிருதுவான இட்லியை நான் வேறெங்கும் தின்றதில்லை.


இட்லியின் ஸ்பரிசத்தில் சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே நான்கு வகை சட்னி தந்து ஆச்சரியப் பட வைத்தார்கள். தேங்காய் சட்னி, புதினா சட்னி இரண்டும்  வழக்கமான சட்னிகள்தான் (குறிப்பாக தேங்காய் சட்னி கெட்டியாக, நன்றாகவே இருந்தது). அடுத்த இரண்டு சட்னிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தவை. ஒன்று...எள்ளு உளுத்தம்பருப்பு சேர்த்துச் செய்தது. அலாதியான சுவை. அடுத்தது குடமிளகாய் சட்னி. இதுவும் புதுமையான ஒன்று.மதுரை ஹோட்டல்களில்  (ஏன் வீடுகளில் கூட) கிடைக்காதது.
இதனை மெதுவான இட்லியுடன் இந்த நான்கு சட்னிகளும் சேரும்பொழுது நாவில் உணவுக்கச்சேரி நடப்பதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. எள்ளு சட்னி தோசையுடன் இன்னும் சிறப்பாகச் சேர்ந்து கொள்கிறது. இட்லி,தோசை என அனைத்தும் விலை அதிகம் தான் என்றாலும் நாவில் நடக்கும் சுவை கச்சேரிக்கு அந்த விலையைத் தரலாம்.

மதியம் மீல்ஸ் தவிர கலந்த சாதங்கள் கிடைக்கிறது. அவையும் நல்ல சுவை. இரவில் மீண்டும் டிஃபன் வகைகள் கிடைக்கும். ஆனாலும் காலை உணவின் போது இருக்கும் சுவை மாலையில் இல்லாதது போலத்  தோன்றியது எனக்கு.

Gopu Iyengar Hotel - West Tower Street , Madurai

உணவகங்கள் பற்றிய என் அனுபவங்களைப் எழுதச் சொல்லிக் கொண்டே இருக்கும் நண்பன் வரதன் முதலில் எழுதச் சொன்னது இந்த ஹோட்டலைப் பற்றித்தான். கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகள் ஆன ஹோட்டல்.

மீனாட்சி கோயில் மேற்கு கோபுரத்தெருவும் வடக்கு கோபுரத்தெருவும் சந்திக்கும் முனையில் இருக்கிறது இந்தச் சின்ன ஹோட்டல். பதினைந்து பதினாறு பேர்அமர்ந்து உணவருந்தலாம். லாகடங்கள் பொருத்தப்பட்ட உயரமான மேற்கூரை கொண்ட பழைய கட்டிடம். நிறுவுனர் கோபி ஐயங்கார் படம் அவரைப் போல பெரிதாக மாட்டிவைத்திருக்கிறார்கள்.

gopu iyengar

இந்த ஹோட்டல் பற்றி நான் முதலில் கேட்டது 2006இல் அலுவலகத்தில் நண்பர் வள்ளியப்பன் சொல்லித்தான். அங்கு பச்சமிளகாய் சட்னியுடன் கிடைக்கும் தவல வடை பற்றித்தான் அதிகம் சொன்னார் வள்ளியப்பன். வாரத்தில் வியாழன் அன்று மட்டும் தான் கிடைக்கும் என்பதும் என் ஆர்வத்தை அதிகரித்தது. தவல வடை நன்றாக இருக்கும் என்று அம்மாவும் சொன்னது என்னை சீக்கிரமே கோபு ஐயங்கார் கடைக்கு இழுத்துச்சென்றது.
அவர்கள் கூறியது துளியும் மிகையில்லை என்று வடையில் முதல் விள்ளல் தின்றதுமே தோன்றியது. பருப்புகளுடன் சிவப்பு மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துச் செய்வார்கள் இந்த வடையை. இந்த வடை வேண்டாவிட்டால் அந்த மாவையே சற்று தளர்த்தி அடை தோசை செய்து தருகிறார்கள் (என் பெரியம்மா செய்யும் அடை தோசை போல இருந்தது ). அதுற்குத் தகுந்தாற்போல் சேர்த்து சாப்பிட நாட்டுச்சக்கரையும் கிடைக்கும்.

எனக்குப் பொதுவாகவே காரம் பிடிக்கும் என்பதால் பச்சமிளகாய் மற்றும் உப்பு மட்டும் சேர்த்து அரைக்கப்படும் அந்தச் சட்னி என்னை மிகவும் கவர்ந்தது. அப்படி ஒன்றைச் செய்யத்தோன்றிய அவர்களை நல்ல ரசனையான படைப்பாளியாகவே நான் நினைப்பேன்.
இந்த கார உணவு உண்ணும் தொடர்ச்சியாகவே அவர்கள் ஹோட்டலில் கிடைக்கும் பொடி தோசை எனக்கு மிகப்பிடித்த தோசை. எள்ளு சேர்த்து காரமாக அரைத்த இட்லி போடி தோசை அது. இதனுடன் அந்த பச்சமிளகாய் சட்னியை சேர்த்து கண்ணீர் மலகச் சாப்பிட்டது  என் அந்தரங்க ரசனை ஆன கணம்.

இவ்வளவு ரசித்து உணவு சமைப்பவர்களால் ஏன் நல்ல காபி மட்டும் செய்ய முடியவில்லை என்பது இன்றும் நான் விடை தேடும் கேள்வி. நாங்கள் இங்கு சாப்பிட்டுவிட்டு ஹோட்டலின் வாசலில் இருக்கும் விசாலம் காபி பாரில் தான் காபி குடிப்போம்

நண்பர் லிபி வேறொரு விஷயத்திற்குச் சொன்ன ஆன்மா சார்ந்த உதாரணம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னது போல் பல ஹோட்டல் களில் சில உணவுகள் நன்றாக அமைந்துவிடும் அனால் நமக்கு மீண்டும் மீண்டும் செல்லத்தோன்றாது. அது வெறும் சுவை மட்டுமே சார்ந்ததன்று அதைச் செய்வதில் உள்ள ஆன்மா தான் என்று உணர்த்திய இடம் கோபு ஐயங்கார் ஹோட்டல்.

PS : திங்கள்கிழமை இவர்களுக்கு வார விடுமுறை நாள் . அன்று ஹோட்டல் இயங்காது.

Hotel Sabarees - Kamarajar Salai (Near Thiagarajar Arts college, Teppakkulam)
முன்னொரு பதிவில்  குறிப்பிட்டிருந்தபடி எங்கள் வீட்டருகே நல்ல சைவ  உணவகம் இல்லாத குறையை முதலில் தீர்த்தது ஹோட்டல் சபரீஸ் தான். தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரிக்கு முன்பு உள்ள Indian Oil பெட்ரோல் பங்க் அருகே உள்ளது இந்த ஹோட்டல்.
பட்ட  மேற்படிப்பில் என்னுடன் படித்த நண்பர்கள் பல ஊர்களில் இருந்தும்  மதுரை  வரும் போது அவர்களின் (எனக்கும்முதல் நாள் முதல் கடமை, காலேஜ் ஹவுஸ் எதிரே இருக்கும் ஹோட்டல் சபரீசில் டீ அருந்துவதே. அந்த அளவுக்கு எங்கள் அனைவருக்கும் பிடித்த இடம் அது. எனவே அவர்கள் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே தொடங்கிய போது திருவிழாவிற்குச் செல்லும் குழந்தை போல மனம் குதூகலித்தது எனக்கு.

திறப்புவிழா  அன்றே அம்மா உள்பட  வீட்டில்  அனைவரையும் அழைத்துச் சென்று விட்டேன். கிட்டத்தட்ட ஐம்பது பேர் உட்காரக் கூடிய ஹால் தரை தலத்தில் உள்ளது. AC கிடையாது. அனால் நல்ல விசாலமான அறை என்பதால் வெய்யில் காலத்திலும் புழுக்கம் இருப்பதில்லை. காலை உணவில் தேர்வு செய்வதற்குப் பெரிய வாய்ப்பு இல்லை. வழக்கமான இட்லி, பூரி, பொங்கல், தோசை வகைகள் தான். மூன்று நான்கு சட்னி வகைகளும், இட்லி பொடியும் தருகிறார்கள்.பொங்கல் தான் இதில் எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல குழைவாக இருக்கும்

மதியம் மீல்ஸ் நல்ல சுவையாக இருக்கும். அதிக பார்சல்களும் வாங்கிச் செல்கிறார்கள். ஒரு பார்சல் வாங்கினால் ரெண்டு பேர் சாப்பிட்டுவிடலாம். திங்கள் முதல் வியாழன் வரை மட்டும்  கூட்டு, பெரிய, கீரை, சாம்பார், ரசம் என்று அவை மட்டும் தனியாகவும் பார்சல் தருகிறார்கள்...என் போன்றவர்களுக்காகவே.

இரவு உணவு தான் இவர்களின் மிகப்பெரிய ஈர்ப்பே. சைவ சிற்றுண்டிகளில் இத்தனை வகைகளா என்று நம்மை ஒவ்வொரு முறையும் வியக்கச் செய்யும் விதமாக பல வகை உணவுகளைத் தருகிறார்கள். பால் கொழுக்கட்டையும், "stuffed" சப்பாத்தியும் எனக்கு மிகவும் பிடித்தவைமசாலா பாலும் நான் அடிக்கடி குடிப்பதுண்டு. பாலில் மஞ்சள், மிளகு, முந்திரி, கிஸ்மிஸ் எல்லாம் சேர்த்து கொதிக்க வைத்துத் தருவார்கள். அருமையான பானம். (அதில் சீனி அளவை மட்டுப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்). இரவில் மட்டும் மாடியிலும் AC அறை செயல்படுகிறது. சிறிய இடம் தான் அது. AC கட்டாயம் வேண்டும் என்றால் மட்டும் அங்கு செல்லலாம். இல்லையென்றால் தரை தளத்தில் உணவருந்தலாம்.
சைவ உணவு தானே, என்ன  varieties இருந்துவிடப் போகிறது என்று எண்ணும் அசைவப்பிரியர்களும் விரும்புச் சாப்பிட கூடிய இடம் ஹோட்டல் சபரீஸ் .


Amman Restaurant - Kamarajar Salai (Opp. Nirmala School)

 இரண்டு, மூன்று வருடங்கள் முன்பு வரை எங்கள் வீட்டின் அருகே, காமராஜர் சாலையில் நல்ல உணவகங்கள், அதுவும் சைவ உணவகங்கள் இல்லை. அந்தக் குறையை போக்குவதுபோல  தெப்பக்குளத்தின் மேற்குப் பக்கம் ஹோட்டல் சபரீஸ் திறந்தார்கள். அதற்க்கு ஒரு வருடம் போல கழித்து அம்மன் ஹோட்டலும் திறக்கப்பட்டது.
 நடிகர் சூரியின் ஹோட்டல் என்றார்கள்.அவரது நண்பர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்து விழா போல கொண்டாடினார்கள்.

 நிர்மலா பெண்கள் மேல் நிலை பள்ளியின் நேர் எதிரே உள்ளது இந்த உணவகம். இரண்டு மூன்று கார்கள் , சில பைக்குகள் நிறுத்த இடம் இருக்கும். மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால், வாகனங்கள நிறுத்தி எடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை.
 உள்ளே நுழைந்ததும் உள்ள குளிரூட்டப்பட்ட  ஹாலில் ஐம்பது பேர் உட்கர்ந்துசாப்பிடலாம். பரிவாக உபசரிக்கிறார்கள். காலையில் இட்லி, பொங்கல், பூரி, தோசை வகைகள் கிடைக்கிறது. இந்தப் பண்டத்தைச் சொன்னாலும் அதனுடன் அவர்களே கொஞ்சம் கேசரி சேர்த்துத் தருகிறார்கள், இலவசமாக.

 தேங்காய், தக்காளி , மல்லி மற்றும் எள்ளு சட்னியுடன் இட்லி, தோசை வகைகள் கிடைக்கும். சட்னி,சாம்பார் அவ்வளவு சிறப்பாக இல்லை.அனால் தோசை மாவு சரியான பதத்தில் இருக்கிறது . நெய் தோசையை  சட்னி , சாம்பார் இல்லாமலேயே சாப்பிடலாம். டீயும் அருமையாக இருக்கிறது. இரவு நேரங்களில் வட இந்திய உணவு வகைகளும், மேலும் சில வகை தோசை வகைகளும்  (பனீர் மசாலா, காளான் மசாலா), இடியாப்பம் போன்றவையும்  கிடைக்கிறது.

 விலையை சபரீஸ் ஹோட்டலுடன் ஒப்பிடலாம்.கிட்ட தட்ட அதே விலை தான்.
அந்தப் பகுதியில் ஹோட்டல் சபரீசுக்கு மாற்றாகச் சென்று வரக்  கூடிய அளவில் இது ஒரு நல்ல உணவகம் தான்.
 
Hotel Ramana Mess - Natham Road (near Ramakrishna mutt, Reserve line), Madurai

கோவில் பிரசாதக் கடைகள் / உணவகங்களின் மீது எனக்கு எப்போதுமே ஒரு அதீத ஈர்ப்பு உண்டு. கோவிலு க்குச் சென்றால் முதலில் பார்ப்பது அங்கு என்ன பிரசாதம் கிடைக்கும் என்று தான். பழமையான சில கோவில்களில் பல "விலாஸ்"களை நீங்கள் பார்க்கலாம். (அப்படியான கடைகளில் எனக்கு மிகவும் பிடித்தது கும்பகோணம் மங்களாம்பிகை மெஸ் ...அது மற்றொரு பதிவில் ....). அந்த மாதிரி கடைகளில் உண்ணும் போது பழமையான ஒரு பாரம்பரியத்துடன் தொடர்பு ஏற்படுவது போன்ற உணர்வு வரும் . அந்தக் கடைகளில் இன்னமும் சற்று நேர்மை இருக்கும் .

அப்படியொரு உணர்வைத் தரும் இடம் மதுரை, நத்தம் ரோட்டில் உள்ள "ரமணா மெஸ்". நல்ல அகலமான ரோடு என்பதால் வாகனங்கள் நிறுத்த இடமிருக்கும். உள்ளே நுழைந்ததும் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய அளவிலான, ரமணர், காஞ்சிப் பெரியவர், கேரளத்துக் கோயில் யானை, விவேகானந்தர் படங்கள் நம்மை வரவேற்கும்.

நல்ல விசாலமானதொரு ஹாலில் முப்பது பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம். AC ரூம் மதிய உணவின் போது செயல்படுகிறதுகாலையில் இட்லி, தோசை வகைகள் , பூரி, சப்பாத்தி (!) கிடைக்கும். இந்த ஹோட்டலை பொறுத்த வரை இந்த உணவு சிறப்பு... அந்த உணவு சுவையானது என்று சொல்லத் தேவை இல்லை.அனைத்தையுமே சிறந்த பொருட்களைக் கொண்டு செய்வதாகத் தான் தெரிகிறது . வீட்டில் சமைத்தது போன்ற உணர்வு, ஒவ்வொரு பண்டத்திலும் தெரிவது தான் இந்த ஹோட்டல் மீதான அபிமானத்தை அதிகரிக்கிறது.
பூரிக்கு பொதுவாக உருளை,வெங்காயம் மசாலா தான் கிடைக்கும் . அனால் இங்கு அதனுடன், அதை விட ருசியான வெள்ளைக் கொண்டைக்கடலை குருமா தருகிறார்கள். அந்த குருமாவிற்க்ககவே மேலும் இரண்டு பூரி சாப்பிடலாம்.அதே தன்மை தோசை,இட்லிக்குத் தரும் சட்னிகளிலும் கூடத்  தெரிகிறது.மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், மிகத் தளரவும் இல்லாமல் இருக்கும் . உணவு வழங்குபவர்களும் உண்பவர்களை நன்றாக உபசரிக்கிறார்கள்.

மதிய உணவிலும் (meals) வித விதமான காய்கள்  தான் தினமும். அநேக ஹோட்டல்களில் இருப்பது போல மீல்ஸ்க்கேன்றே இருக்கும் பீட்ரூட், முட்டைகோஸ்கள், அரை வேக்காட்டுப் பட்டாணிகள் இங்கு போடுவதில்லை. ஒவ்வொரு காயையும் அதன் தன்மை கெடாமல் சமைக்கிறார்கள். மூன்று நான்கு வகை காய்களுடன் சிறிய வடை, பாயசம் (highlight ), தயிர், அப்பளம் தருகிறார்கள் . சோற்றிலும் சோடா உப்பு சேர்ப்பதாகத் தெரியவில்லை. (உணவருந்தி பல மணி நேரம் இருக்கும் உப்புசம் இங்கு ஏற்படுவதில்லை ).
இங்கு கிடைக்கும் டீ எனக்குப் மதுரையிலேயே பிடித்த டீகளில் ஒன்று.சரியான பதத்தில் இருக்கும் பால் மற்றும் டிகாக்ஷனே காரணம். டீயுடன் ஒப்பிடும் போது காபி போடுவதில் சிரத்தை சற்று குறைவாகத் தெரிகிறது. அது அவ்வளவு ருசி இல்லை.

மனதிற்கு அணுக்கமான சந்தோஷத்தைத் (நிறைவு என்றும் சொல்லலாம்) தருவதில் உணவிற்குப் பெரும் பங்கு இருப்பதாக நான் பல முறை உணர்ந்திருக்கிறேன் . அப்படியான உணர்வு ரமணா மெஸ் செல்லும் போதெல்லாம் எனக்குத் தோன்றும்.
PS : இரவிலும் டிபன்கள் உண்டு .


HOTEL ATCHAYA BHAVAN, Mattuthavani, Madurai
இடியாப்பம் சாப்பிட்டுட்டு ஆபீஸ் போறேன்னு மனைவிட்ட சொல்லிட்டு அண்ணா நகர் பர்மா இடியாப்பக் கடைக்குப் போனால் அன்று பார்த்து கடை சார்த்தப்பட்டிருந்தது . சரி இன்று  இடியாப்பம் நமக்கில்லை என்று முடிவு செய்து (காலையில் மதுரை உணவகங்களில் இடியாப்பம் அநேகமாக கிடைக்காது) மாட்டுத்தாவணி moffasil பஸ் ஸ்டாண்டு எதிரே இருக்கும் அட்சயா பவன் ஹோட்டல் சென்றேன் .

இங்கு டீ குடித்திருக்கிறேன் சில முறை.அந்த ஏரியாவில் குடிக்கும்படியான ஒரே டீ கடை அது தான். நான் பொங்கலும் என் நண்பர் தோசையும் ஆர்டர் செய்தோம். பொங்கலுக்கு தேங்காய் சட்னி , தக்காளி சட்னி  மற்றும் மல்லி சட்னி கொடுத்தனர். (மதுரை ஹோட்டல்களில் சாம்பார் உண்டு என்பதை சொல்லத் தேவை இல்லை ). தேங்காய் சட்னியில் தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து இருந்தனர். அநேகமாக ஹோட்டல்களில் இதனுடன் பூண்டு சேர்ப்பது வழக்கம். தனிப்பட்ட முறையில் எனக்கு தேங்காய் சட்னியில் பூண்டு சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆகவே இந்த சட்னி எனக்குப் பழக்கமான சுவையாக இருந்தது. மல்லி சட்னியில் இஞ்சி சேர்ந்திருந்தது ருசியைக் கூட்டியது . மல்லி சட்னியை அவ்வளவாக விரும்பாத எனக்கு அது பிடித்திருந்தது ஆச்சரியம்.

தக்காளி சட்னியில் சிவப்பு மிளகாய் சேர்ந்திருந்தது நல்ல காரத்தை கொடுத்தது. மேலும் ஒரு ஆச்சரியம் சாம்பார் வடிவில் காத்திருந்தது. பொதுவாக சாம்பாரில் துவரம் பருப்பு தான் அதிகம் சேர்ப்பார்கள். அனால் இவர்கள் எனக்குப் பிடித்த மாதிரி  பாசிப்பருப்பு சேர்ந்திருந்தது எனது நண்பனின் அம்மா ஒருவரின் கை மனத்தை நினைவூட்டியது. இதை விட சிறப்பாக நாளை ஆரம்பிக்க முடியாது என்று சொல்வேன்.

அடுத்ததாக நானும் ஒரு தோசை ஆர்டர் செய்தேன். மாவு சரியான அளவு புளித்து சுவை நன்றாக இருந்தது. அண்ணா நகர் சண்முகா மெஸ் அளவிற்கு தோசை ருசி இல்ல என்றாலும் நான்றாகத்தான் இருந்தது. ஷண்முக மெஸ் தோசை ருசியின் முக்கிய காரணம் அவர்கள் ஊற்றும் நல்லெண்ணெய் என்று நினைக்கிறேன்.

நிறைவாக காபி ஆர்டர் செய்து நானும் நண்பனும் நல்லவேளையாக பகிர்ந்துகொண்டோம். பாலில் அதிகம் தண்ணீர் சேர்த்து தான் காரணம். காபி டிகாக்ஷன் நன்றாக இருந்தும் பால் மிகவும் தண்ணியாக இருந்ததால் ருசி குறைந்து விட்டது. ஆனாலும் ஒரு நல்ல சிற்றுண்டி அருந்திய நிறைவோடு அலுவலகம் கிளம்பினோம்.